தமிழ்ச்சித்தம்

நாஞ்சில் பாரதியின் படைப்புகள்

குருவித் தாத்தா

Posted by DR.M.KOLAPPA PILLAI // NANJIL BHARATHI மேல் நவம்பர் 10, 2006

ஒருநாள், குருவித் தாத்தா அழுததைப் பார்த்தேன்.

குருவித் தாத்தா எங்களுக்கெல்லாம் ரெம்ப சிநேகிதம். அவருக்கு ஏன் குருவித் தாத்தானு பேர் வந்ததுன்னு ஒரு நாள் கேட்டோம்.

“அது ஒண்ணுமில்லடே, எனக்கு சொந்த ஊரு குருவிக் குளம். நான் இந்த பாளையங்கோட்டைக்கு வந்து அறுவது வருஷமானாலும், என்னய குருவிக் குளம் தாத்தான்னு கூப்பிட்டு குருவித் தாத்தா ஆக்கிப்புட்டாக…” என்றார். இருந்தாலும் அந்தப் பெயரில் ஒரு கவர்ச்சி இருந்தது.

குருவித் தாத்தா ரெம்ப வேடிக்கையானவர், பெரிய மூக்குக்கு உள்ளே பட்டணம் பொடியை வச்சு, அண்ணாந்து பார்த்துக்கிட்டு, கண்ணெல்லாம் இடுக்கி, ரெண்டு கையையும் விரிச்சிக்கிட்டு, ‘படார்’ னு தும்முவார். அதை வேடிக்கப் பார்க்க, வேப்பமரத்தடியில் அவரைச் சுற்றி ஒரு கூட்டமாகவே காத்திருப்போம். அப்படித் தும்மும் போது ஒரு தடவை அவர் வேட்டி அவிழ்ந்து ரகளையானது கூட உண்டு.

அழும்போது கூட தாத்தா விகாரமா  இருந்தார். மூக்கெல்லாம் புடைச்சு,  கண் வீங்கி, கண்ணீர் மாலை மாலையா  விழ, அழுக்கு வேட்டியில் மூக்கைச் சிந்திக்கிட்டே அழுதாரு.

பாவமா  இருந்திச்சு..

“ஏன் தாத்தா அழறே..?”

“ஏல.. நீங்க ஒருத்தனும் கலியாணம் பண்ணக் கூடாதுலே … பண்ணினாலும், பொண்டாட்டி செத்தப்புறம், சோத்துக்கு மருமக கையை நம்பக் கூடாதுலே..”, — தாத்தா சொன்ன பிலாக்கணத்துல ஒரு சிறு சரித்திரமே தெரிஞ்சது.

குருவித் தாத்தாவின் மருமக ஒண்ணும் கொடுமைக்காரியில்லை. அவள் கஷ்டம் அவளுக்கு, அவ புருஷனின் சொற்ப சம்பளத்துல ரெண்டு பொம்பளப் பிள்ளைகளைக் கரையேத்தணுமேனு கவலை அவளுக்கு.

குருவித் தாத்தா ஒண்ணும் பெருசா சாப்பிட மாட்டாரு. காலைல செல்லத்தா கடையில நாலு இட்லி, மதியம் வீட்ல மருமக சமைச்ச சோறு, ராத்திரி ரெண்டு கோதம்பு தோசை.. இதைச் சரியா குடுக்கல்லண்ணுதான் தாத்தா அழுகிறாரு… ரெண்டு நாளா இட்லிக்கு காசு கொடுக்கல்லியாம். தாத்தா கவலை தாத்தாவுக்கு.

திடீர்னு ஒரு நாள் தாத்தா செத்துப் போயிட்டாரு. அது வரைக்கும் செத்துப் போனவங்களை நாங்க பார்த்ததே இல்லை. வீட்டுத் திண்ணைல தாத்தாவைக் கிடத்தியிருந்தாங்க. தாத்தா  கண்ணாடியெல்லாம் போட்ட, காலர் வைச்ச சட்டையெல்லாம் போட்டு, பொணமாப் பார்க்க குருவித் தாத்தா மாதிரியே இல்ல. தாத்தா லேசா சிரிச்ச மாதிரி செத்துப் போயிருந்தாரு, எங்களுக்கு அதப் பார்க்க பயமாவேயில்லை.

ஊர்ல எல்லாரும் கூடி, தாத்தாவைத் தூக்கிட்டுப் போய்ட்டாங்க… அடுத்த நாள் எங்கம்மா  கூட நைசா தாத்தா வீட்டுக்கு துட்டிக்குப் போனேன். அன்னக்கி காடாத்து. ஆம்பளங்க எல்லாம் மயானத்துக்குப் போய்ட்டாங்க. தாத்தா  மருமகக் கிட்டே அம்மா பேசிக்கிட்டிருந்தாங்க. தாத்தா படத்துக்கு மாலையெல்லாம் போட்டு வச்சிருந்தாங்க. தாத்தா படத்துக்கு முன்னால நாலு இட்லி வச்சு, காப்பித் தண்ணி கூட வச்சிருந்தாங்க. தாத்தா போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தார். எனக்கென்னவோ தாத்தாவோட அழுகைதான் ஞாபகம் வந்தது.

ஒரு பதில் to “குருவித் தாத்தா”

  1. உயிரோடு இருக்கும் போது சந்தோசமாக சாப்பாடு கொடுத்து, அவரை அரவணைத்து அன்பு காட்டாது, அவர் செத்த பின்பு…

    “நாலு இட்லி வச்சு, காப்பித் தண்ணி கூட வச்சிருந்தாங்க”…

    இதை வைச்சு ஊருக்குக் காட்டுவதில் என்ன பயன்?… இல்லையா?

பின்னூட்டமொன்றை இடுக